Friday, August 8, 2008

பூர்வ ஜென்ம பந்தம்
“ஓம் பஜ்ஜிதானந்த பரப்பிரம்மா...”

கோரஸாக சத்தத்தோடு சேர்த்து பக்தியையும் எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர் பக்த கோடிகள்.

அவனுக்கு இதுதான் முதல் முறை.

சற்று தயங்கியவாறே அருகில் இருந்தவரிடம் கேட்க முற்பட்டான்.

“ஜி..” கேட்கக்கூட இல்லை.

அதற்குள் சடாரெனத் திரும்பி, அவனை ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, மறுபடியும் கூட்டத்தோடு “ஓம் பஜ்ஜிதா.....” என ஐக்கியமாகிவிட்டார் அருகில் அமர்ந்திருந்தவர்.

அவனுக்கு அவமானமாக போய் விட்டது.

'நான் அப்படி என்னத்த கேட்டுட்டேன்?.. இன்னும் கேட்கக் கூட இல்ல. ஏன் என்னை இப்படி பார்த்தாரு?'.

அவனுக்கு அண்ணன் மேல் கோபமாக வந்தது.

'ஒரு தடவையாவது அங்க வாடா! உனக்கே வித்தியாசம் தெரியும். சுவாமிஜியோட பவர் என்னன்னு ஒரு தடவையாவது உணர முடியும்'

அண்ணனுக்காக வருவதாக ஒத்துக் கொண்டான். வந்தும் விட்டான்.

அது ஒரு ஆசிரமம்.

'பஜ்ஜிதானந்த சுவாமிகள் இவ்வுலகை இரட்சிக்க அவதரித்திருக்கிறார். இவனை இரட்சிக்க மாட்டாரா?'
அண்ணனுக்கு இவன் மேல் பாசம் அதிகம்.

இவனோ +2 முடித்துவிட்டான். அதாவது பரீட்சை எழுதி முடித்துவிட்டான்.

'அடுத்தது என்ன? இவனை என்ன படிக்க வைப்பது? தனது தம்பிக்கு சுதர்மத்தை சுவாமிஜி காட்ட மாட்டாரா? கண்டிப்பாக காட்டுவார். அவர் கருணையே உருவானவர் ஆயிற்றே! கருணாமூர்த்தி - அவருடைய நாமங்களில் ஒன்றாயிற்றே!!'

இன்று சுவாமிஜியே நேரடியாக எடுக்கும் ஒருநாள் ஆன்மீக வகுப்பு. வழக்கமாக அவரது அடிப்பொடிகளில் ஒருவர்தான் வகுப்புகளை எடுப்பார்கள். இன்று அவரே எடுக்கிறார்.

பக்தர்களை வகுப்பு வாரியாகப் பிரித்து உட்கார வைத்திருந்தார்கள், சீனியாரிட்டி பிரகாரம்.

அண்ணனுக்கு தம்பி மேல் அக்கறைக்கு அளவில்லை. தன்னுடைய அனுமதிச் சீட்டை தம்பிக்கு கொடுத்து விட்டு, ஆசிரமத்தின் ரிசப்ஷனில் போய் உட்கார்ந்துக் கொண்டான், தியாகி!

“இன்று உடலில் ஆங்காங்கே இருக்கும் சக்கரங்களைப் பற்றி சுவாமிஜி வகுப்பெடுக்கப் போகிறார்”. அடிப்பொடி ஒருவன் அறிவித்தான்.

'சக்கரங்களா? நம்ம உடம்புல இருக்கா? அய்யய்யோ! பிறக்கும் போதே இருக்குமா? இல்லை.. வளர ஆரம்பிக்கும்போது நம்ம உடம்புக்குள்ள ஒவ்வொண்ணா வர ஆரம்பிக்குமா?
எங்கேயிருந்து வரும்? இது வரைக்கும் யாரும் நம்மக் கிட்ட இதைப் பத்தி சொன்னதே இல்லையே!'

அவனுக்குள் கொஞ்சம் ஆர்வம் பீறிட்டது. அதன் விளைவாக கேள்வி ஒன்றும் தோன்றியது.

'சக்கரம்னா என்ன?' இதைத் தான் அருகில் இருந்தவரிடம் கேட்க நினைத்தான்.

கேட்க முற்பட்ட போதுதான் அந்த ஏளனப் பார்வை.

அண்ணன்தான் அவர் அருகில் இவனை உட்கார வைத்தான். அதற்கு முன்னரே அவரைப் பற்றி சொல்லியிருந்தான்.

“அவரோட பேர் சக்திவேல்ஜி. சுவாமிஜியோட ரொம்ப நெருக்கமானவர். ”

“அவர் இருக்கிற இடத்திலிருந்தே கண்ணை மூடிக்கிட்டு சுவாமிஜியோட பேசுவாராம்!”

“பல ஜென்மங்களா சுவாமிஜி அவதரிக்கும்போதெல்லாம், இவரும் பிறப்பாராம். அப்படி ஒரு பூர்வ ஜென்ம பந்தம். அப்படி ஒரு பக்தி.”

அண்ணன் இவனை பயமுறுத்தியிருக்கிறான்.

அதனால்தான் அவரிடமே அந்தக் கேள்வியை கேட்க நினைத்து..
“ஜி..” அவமானமாகிப் போய்விட்டது இவனுக்கு.

இப்போது சுவாமிஜியை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.

“ஓகே.. மை டியர் சில்ட்ரன்.. எல்லாரும் கண்ணை மூடுங்க. நான் சொல்றதை கவனமா கேளுங்க..”

ஆக்கினைச் சக்கரம் என்பது..”

சுவாமிஜி விவரிக்க ஆரம்பித்தார். அவனும் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

கவனிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து சடாரென விழிப்பு வந்தது.

'அய்யய்ய.. தூங்கிட்டேன் போல இருக்கே!'

அருகில் நோட்டம் விட்டான்.
சக்திவேல்ஜி கண்களை மூடியவாறு இருந்தார்.

மேடையை கவனித்தான்.
சுவாமிஜி கண்களை மூடியவாறு ஏதோ மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனைத் தவிர அனைவரும் கண்களை மூடியிருந்தனர்.
ஓரிரண்டு குறட்டைச் சத்தங்களும் கேட்டன.

மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

சுவாமிஜி ஆக்கினைச் சக்கரத்தை இப்போது யாவரும் காட்சியாக பார்க்கலாம் எனச் சொன்னார்.

கண்களை இறுக மூடிக் கொண்டான்.

ஏதாவது தெரிகிறதா? எனக் கண்களுக்குள் தேடிப் பார்த்தான்.
இருட்டைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

விழிகளை உருட்டினான்.
மேலே.. கீழே.. இட.. வல..

பயனில்லை.

ஆனால் சுவாமிஜியோ காட்சியை ரசிக்க ஆரம்பியுங்கள் என்றார்.

அவனுக்கு கடுப்பேறியது.

'ஆமாம்.. இங்க காட்சியே தெரியல.. அப்புறம் எப்படி ரசிக்கிறது?'

இருந்தாலும் முயற்சி செய்தான்.
'இன்று எதையாவது பார்த்தே ஆக வேண்டும். அண்ணனை சந்தோஷப்படுத்த வேண்டும்.'

தலையை நான்கு பக்கமும் சுத்தினான்.
கீழே.. பயனில்லை. இருட்டுதான்.
வலது.. அதேதான்.

மேலே.. 'ஆஹா.. கண்களுக்குள் பிரகாசம்.. சிகப்பா ஏதோ தெரியுதே! '
அவனுக்கு இன்பம் பெருக்கெடுத்தது.

கண்களைத் திறந்தான். சூரியன்.
அவனுக்குப் புரிந்தது.
'அடடா.. இதைத் தான் தப்பா நினைச்சிட்டோமா!'

முயற்சிகளை கைவிட்டான்.

அவனது அண்ணன் ஒரு தடவை சொல்லியிருந்தான்.
“சுவாமிஜி சொல்லுவார்.. எப்போ ஒருத்தன் தன்னோட முயற்சியை கைவிடுறானோ, அப்போதான் நான் அவனை ஆட்கொள்வேன் என்று..”

இவனோ அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.

சுவாமிஜி மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“ஓகே.. மை டியர் சில்ட்ரன்.. எல்லாரும் கண்களைத் திறங்க”

சக்திவேல்ஜியை நோக்கினார்.

“சக்திவேல்.. கேன் யு ஷேர் யுவர் எக்ஸ்பீரியன்ஸ் வித் ஆல்?” சுவாமிஜி அன்பு கட்டளையிட்டார்.

இவன், சக்திவேல்ஜியை உற்று கவனித்தான்.

சக்திவேல்ஜி எழுந்தார். அடிப்பொடிகளில் ஒருவன் அவரை நோக்கி மைக்குடன் ஓடி வந்தான்.

அவர் கையில் மைக் தரப்பட்டது.

“சுவாமிஜி.. ஐ லாஸ்ட் யுவர் க்ரேஸ்.. எனக்கு என்னாச்சுன்னே தெரியல! என்னால சக்கரத்தை பார்க்க முடியல. ” சக்திவேல்ஜி கண்களில் நீர்.

சுவாமிஜி அவரை தீர்க்கமாகப் பார்த்தார்.

“சக்திவேல்.. உனக்கு அகந்தை அதிகமாகி விட்டது. என்னோடு நெருக்கமானவன் என்ற அகந்தை!”

“இந்த அகந்தை உன்னை விட்டு எப்போது நீங்குகிறதோ.. அப்போதுதான் மீண்டும் என்னுடன் நெருக்கமானவன் ஆவாய். என்னிடம் விடாமல் பிரார்த்தனை செய், அகந்தையை நீக்குமாறு..”

“நௌ யூ கேன் சிட்”

அவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
தன்னை அவமானப்படுத்தியவர் அவமானப்பட்டுவிட்டார்.

சுவாமிஜிமேல் அவனுக்கு ஒரு மரியாதை உண்டாக ஆரம்பித்தது.

சுவாமிஜி தொடர்ந்தார்.

“இங்கே யாருக்காவது சக்கரம் தெரிந்ததா?”

“இஸ் தேர் எனி ஒன் ஹியர்?”

இவரிடமே அந்த சந்தேகத்தை நிவர்த்திசெய்து கொள்ளலாம் என்று நினைத்தவாறே கேள்வி கேட்பதற்காக கையை தூக்கினான்.

“ஆஹா! அபாரம்!! இங்கே ஒருவன் பார்த்துவிட்டான்” என்று கூறியவாறே சுவாமிஜி அவனைப் பெருமையுடன் பார்த்தார்.. பூர்வ ஜென்ம பந்தம்!

9 comments:

shakthi said...

very nice and interesting. unga narration romba nalla irukku. sarcastic and surtle way of expressing, really good one. keep writing...all the best

G Gowtham said...

குட்டி குட்டி வாக்கியங்களாக எழுதுவதும் எளிமையான வார்த்தைகளைக் கையால்வதும் எழுத்தை ஆள்வதற்கான சூட்சுமம். படிப்பவர்களுக்கு சட்டென காட்சிப்படும். அந்த சூட்சுமம் உங்கள் எழுத்தில் இயல்பாகவே அமைந்திருக்கிறது. Spelling Mistakes வராமல் பார்த்துக் கொள்ளவும். வாழ்த்துக்கள்!

ராதாகிருஷ்ணன் said...

தலைவரே,

இப்படி சிரிச்சு ரொம்ப நாளாச்சு!!

ஆர். முத்துக்குமார் said...

பாம்பின் கால் பாம்பறியும்

gowri said...

nags,
மிகவும் மகிழ்ந்தேன்.
நல்ல நடை வருகிறது உன் எழுத்தில்.
வாழ்த்துக்கள்.
தொடரட்டும் புதிய பயணம்....

sv said...

உங்களுக்கு நகைச்சுவை நல்லா வருது.

சு. க்ருபா ஷங்கர் said...

கலக்கறீங்க. நீங்களும் bloggerஆ ஆகிட்டீங்களா?

இதைப் படிச்சப்பறம் எனக்கு மட்டும் என்னமோ சம்பந்தாசம்பந்தமில்லாம லினக்ஸ், ஃப்ரீசாஃப்ட்வேர், ஓப்பன் சோர்ஸ்ன்னு திரிஞ்சது ஞாபகம் வருது.

அவனும் அவளும் said...

கலக்கறீங்க நாகராஜ். செமையா இருந்தது உங்க எளிமையான நடை.

Raj said...

சுவாரசியம்ம்ம்........ஆமாம்..அந்த சாமி யாரு.....மந்திரத்தோட முதல் வரி யாரையோ குறிப்பிடுதே