Saturday, December 13, 2008

“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”

இப்போது நான் பெங்களூருக்கு சதாப்தி எக்ஸ்பிரசில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.
ரயில் பெட்டிக்குள் நுழைந்தது முதல் எங்கு பார்த்தாலும் இந்தி மயம்.

கண்ணில் பட்டவைகளை கிளிக்கியிருக்கிறேன்.






டிக்கெட் பரிசோதகரிடம் நான் கேட்டது இதுதான்..

“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”
“அப்போ போய் இந்தி கத்துக்கணுமா சார்?”

*******************

(அப்டேட் : சுமார் ஒரு மணி நேரம் கடந்த பின்னர்...)

சென்ற முறை TTE பதில் ஏதும் கூறமால் ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.
அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.

நானும் அவரை விடுவதாக இல்லை.

மீண்டும் என்னைக் கடந்து செல்லும் போது, இன்னொரு முறை கேட்டேன்.

“இல்லைன்னா.. அந்த நேரத்துல லாலுவுக்கு ஃபோன் பண்ணி என்ன எழுதி இருக்குன்னு இங்கிலீஷ்ல சொல்லச் சொல்லணுமா சார்?”
நக்கலுடன் கேட்டேன்.

அவரோ ஒரு பதிலில் என்னை கடாசி விட்டு சென்றார்.

“எதுக்கு அவ்ளோ கஷ்டப்படுறீங்க? உங்க மினிஸ்டர் வேலுவுக்கு ஃபோன் போட்டீங்கன்னா என்ன எழுதியிருக்குன்னு தமிழிலேயே சொல்லிடப் போறாரு!”

Friday, August 8, 2008

பூர்வ ஜென்ம பந்தம்




“ஓம் பஜ்ஜிதானந்த பரப்பிரம்மா...”

கோரஸாக சத்தத்தோடு சேர்த்து பக்தியையும் எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர் பக்த கோடிகள்.

அவனுக்கு இதுதான் முதல் முறை.

சற்று தயங்கியவாறே அருகில் இருந்தவரிடம் கேட்க முற்பட்டான்.

“ஜி..” கேட்கக்கூட இல்லை.

அதற்குள் சடாரெனத் திரும்பி, அவனை ஏளனமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, மறுபடியும் கூட்டத்தோடு “ஓம் பஜ்ஜிதா.....” என ஐக்கியமாகிவிட்டார் அருகில் அமர்ந்திருந்தவர்.

அவனுக்கு அவமானமாக போய் விட்டது.

'நான் அப்படி என்னத்த கேட்டுட்டேன்?.. இன்னும் கேட்கக் கூட இல்ல. ஏன் என்னை இப்படி பார்த்தாரு?'.

அவனுக்கு அண்ணன் மேல் கோபமாக வந்தது.

'ஒரு தடவையாவது அங்க வாடா! உனக்கே வித்தியாசம் தெரியும். சுவாமிஜியோட பவர் என்னன்னு ஒரு தடவையாவது உணர முடியும்'

அண்ணனுக்காக வருவதாக ஒத்துக் கொண்டான். வந்தும் விட்டான்.

அது ஒரு ஆசிரமம்.

'பஜ்ஜிதானந்த சுவாமிகள் இவ்வுலகை இரட்சிக்க அவதரித்திருக்கிறார். இவனை இரட்சிக்க மாட்டாரா?'
அண்ணனுக்கு இவன் மேல் பாசம் அதிகம்.

இவனோ +2 முடித்துவிட்டான். அதாவது பரீட்சை எழுதி முடித்துவிட்டான்.

'அடுத்தது என்ன? இவனை என்ன படிக்க வைப்பது? தனது தம்பிக்கு சுதர்மத்தை சுவாமிஜி காட்ட மாட்டாரா? கண்டிப்பாக காட்டுவார். அவர் கருணையே உருவானவர் ஆயிற்றே! கருணாமூர்த்தி - அவருடைய நாமங்களில் ஒன்றாயிற்றே!!'

இன்று சுவாமிஜியே நேரடியாக எடுக்கும் ஒருநாள் ஆன்மீக வகுப்பு. வழக்கமாக அவரது அடிப்பொடிகளில் ஒருவர்தான் வகுப்புகளை எடுப்பார்கள். இன்று அவரே எடுக்கிறார்.

பக்தர்களை வகுப்பு வாரியாகப் பிரித்து உட்கார வைத்திருந்தார்கள், சீனியாரிட்டி பிரகாரம்.

அண்ணனுக்கு தம்பி மேல் அக்கறைக்கு அளவில்லை. தன்னுடைய அனுமதிச் சீட்டை தம்பிக்கு கொடுத்து விட்டு, ஆசிரமத்தின் ரிசப்ஷனில் போய் உட்கார்ந்துக் கொண்டான், தியாகி!

“இன்று உடலில் ஆங்காங்கே இருக்கும் சக்கரங்களைப் பற்றி சுவாமிஜி வகுப்பெடுக்கப் போகிறார்”. அடிப்பொடி ஒருவன் அறிவித்தான்.

'சக்கரங்களா? நம்ம உடம்புல இருக்கா? அய்யய்யோ! பிறக்கும் போதே இருக்குமா? இல்லை.. வளர ஆரம்பிக்கும்போது நம்ம உடம்புக்குள்ள ஒவ்வொண்ணா வர ஆரம்பிக்குமா?
எங்கேயிருந்து வரும்? இது வரைக்கும் யாரும் நம்மக் கிட்ட இதைப் பத்தி சொன்னதே இல்லையே!'

அவனுக்குள் கொஞ்சம் ஆர்வம் பீறிட்டது. அதன் விளைவாக கேள்வி ஒன்றும் தோன்றியது.

'சக்கரம்னா என்ன?' இதைத் தான் அருகில் இருந்தவரிடம் கேட்க நினைத்தான்.

கேட்க முற்பட்ட போதுதான் அந்த ஏளனப் பார்வை.

அண்ணன்தான் அவர் அருகில் இவனை உட்கார வைத்தான். அதற்கு முன்னரே அவரைப் பற்றி சொல்லியிருந்தான்.

“அவரோட பேர் சக்திவேல்ஜி. சுவாமிஜியோட ரொம்ப நெருக்கமானவர். ”

“அவர் இருக்கிற இடத்திலிருந்தே கண்ணை மூடிக்கிட்டு சுவாமிஜியோட பேசுவாராம்!”

“பல ஜென்மங்களா சுவாமிஜி அவதரிக்கும்போதெல்லாம், இவரும் பிறப்பாராம். அப்படி ஒரு பூர்வ ஜென்ம பந்தம். அப்படி ஒரு பக்தி.”

அண்ணன் இவனை பயமுறுத்தியிருக்கிறான்.

அதனால்தான் அவரிடமே அந்தக் கேள்வியை கேட்க நினைத்து..
“ஜி..” அவமானமாகிப் போய்விட்டது இவனுக்கு.

இப்போது சுவாமிஜியை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.

“ஓகே.. மை டியர் சில்ட்ரன்.. எல்லாரும் கண்ணை மூடுங்க. நான் சொல்றதை கவனமா கேளுங்க..”

ஆக்கினைச் சக்கரம் என்பது..”

சுவாமிஜி விவரிக்க ஆரம்பித்தார். அவனும் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

கவனிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து சடாரென விழிப்பு வந்தது.

'அய்யய்ய.. தூங்கிட்டேன் போல இருக்கே!'

அருகில் நோட்டம் விட்டான்.
சக்திவேல்ஜி கண்களை மூடியவாறு இருந்தார்.

மேடையை கவனித்தான்.
சுவாமிஜி கண்களை மூடியவாறு ஏதோ மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.

அவனைத் தவிர அனைவரும் கண்களை மூடியிருந்தனர்.
ஓரிரண்டு குறட்டைச் சத்தங்களும் கேட்டன.

மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்.

சுவாமிஜி ஆக்கினைச் சக்கரத்தை இப்போது யாவரும் காட்சியாக பார்க்கலாம் எனச் சொன்னார்.

கண்களை இறுக மூடிக் கொண்டான்.

ஏதாவது தெரிகிறதா? எனக் கண்களுக்குள் தேடிப் பார்த்தான்.
இருட்டைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

விழிகளை உருட்டினான்.
மேலே.. கீழே.. இட.. வல..

பயனில்லை.

ஆனால் சுவாமிஜியோ காட்சியை ரசிக்க ஆரம்பியுங்கள் என்றார்.

அவனுக்கு கடுப்பேறியது.

'ஆமாம்.. இங்க காட்சியே தெரியல.. அப்புறம் எப்படி ரசிக்கிறது?'

இருந்தாலும் முயற்சி செய்தான்.
'இன்று எதையாவது பார்த்தே ஆக வேண்டும். அண்ணனை சந்தோஷப்படுத்த வேண்டும்.'

தலையை நான்கு பக்கமும் சுத்தினான்.
கீழே.. பயனில்லை. இருட்டுதான்.
வலது.. அதேதான்.

மேலே.. 'ஆஹா.. கண்களுக்குள் பிரகாசம்.. சிகப்பா ஏதோ தெரியுதே! '
அவனுக்கு இன்பம் பெருக்கெடுத்தது.

கண்களைத் திறந்தான். சூரியன்.
அவனுக்குப் புரிந்தது.
'அடடா.. இதைத் தான் தப்பா நினைச்சிட்டோமா!'

முயற்சிகளை கைவிட்டான்.

அவனது அண்ணன் ஒரு தடவை சொல்லியிருந்தான்.
“சுவாமிஜி சொல்லுவார்.. எப்போ ஒருத்தன் தன்னோட முயற்சியை கைவிடுறானோ, அப்போதான் நான் அவனை ஆட்கொள்வேன் என்று..”

இவனோ அனைத்து முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.

சுவாமிஜி மீண்டும் பேச ஆரம்பித்தார்.

“ஓகே.. மை டியர் சில்ட்ரன்.. எல்லாரும் கண்களைத் திறங்க”

சக்திவேல்ஜியை நோக்கினார்.

“சக்திவேல்.. கேன் யு ஷேர் யுவர் எக்ஸ்பீரியன்ஸ் வித் ஆல்?” சுவாமிஜி அன்பு கட்டளையிட்டார்.

இவன், சக்திவேல்ஜியை உற்று கவனித்தான்.

சக்திவேல்ஜி எழுந்தார். அடிப்பொடிகளில் ஒருவன் அவரை நோக்கி மைக்குடன் ஓடி வந்தான்.

அவர் கையில் மைக் தரப்பட்டது.

“சுவாமிஜி.. ஐ லாஸ்ட் யுவர் க்ரேஸ்.. எனக்கு என்னாச்சுன்னே தெரியல! என்னால சக்கரத்தை பார்க்க முடியல. ” சக்திவேல்ஜி கண்களில் நீர்.

சுவாமிஜி அவரை தீர்க்கமாகப் பார்த்தார்.

“சக்திவேல்.. உனக்கு அகந்தை அதிகமாகி விட்டது. என்னோடு நெருக்கமானவன் என்ற அகந்தை!”

“இந்த அகந்தை உன்னை விட்டு எப்போது நீங்குகிறதோ.. அப்போதுதான் மீண்டும் என்னுடன் நெருக்கமானவன் ஆவாய். என்னிடம் விடாமல் பிரார்த்தனை செய், அகந்தையை நீக்குமாறு..”

“நௌ யூ கேன் சிட்”

அவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
தன்னை அவமானப்படுத்தியவர் அவமானப்பட்டுவிட்டார்.

சுவாமிஜிமேல் அவனுக்கு ஒரு மரியாதை உண்டாக ஆரம்பித்தது.

சுவாமிஜி தொடர்ந்தார்.

“இங்கே யாருக்காவது சக்கரம் தெரிந்ததா?”

“இஸ் தேர் எனி ஒன் ஹியர்?”

இவரிடமே அந்த சந்தேகத்தை நிவர்த்திசெய்து கொள்ளலாம் என்று நினைத்தவாறே கேள்வி கேட்பதற்காக கையை தூக்கினான்.

“ஆஹா! அபாரம்!! இங்கே ஒருவன் பார்த்துவிட்டான்” என்று கூறியவாறே சுவாமிஜி அவனைப் பெருமையுடன் பார்த்தார்.. பூர்வ ஜென்ம பந்தம்!

Saturday, August 2, 2008

நேரா போய் சாவுடா




“போடா.. நேரா போய் சாவுடா”
கஷ்டப்பட்டு தனது கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கிவிட்டு கத்தினான், காருக்குள் இருந்தவாரே!

பேர் கூட சொல்லாமல் சாபம் தந்து போய் விட்டான் அந்த குழாய் அணிந்த முனிவன்.

பரபரப்பான வியாழன் இரவு மணி 8. இடம் - ரெசிடென்சி ஓட்டல் அருகில் உள்ள சிக்னல்.
நண்பர்கள் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அலுவலத்திலிருந்து அவர்களைப் பார்ப்பதற்குதான் சென்று கொண்டிருக்கிறேன்.

எல்லாரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டுவிட்டு, அங்கே செல்லத் திட்டம்.
‘ஆண்டவா.. எல்லாம் திட்டமிட்டபடி நடக்கணும்’. ஏற்கனவே எனக்கு கொஞ்சம் டென்ஷன்.

இதில் இவன் வேறு என்னை சாகச் சொல்கிறான்.
நின்றுக் கொண்டிருந்த மாநகரப் பேருந்தை முந்த முயற்சித்த போது, எதிரில் வந்து விட்டான்.
தவறு என்னுடையதுதான். உடனே வண்டியை நிறுத்திவிட்டேன்.

‘சரி.. ரிவர்ஸ் எடுக்கலாம்’ என நினைத்தபோது தான், ‘அடடா.. நம்ம ஓட்டுறது கார் இல்லையே! பைக் ஆச்சே!!’ என்று நினைவுக்கு வந்தது.
கால்களால் நெம்பியவாரே எனது பைக்கை பின்தள்ளினேன்.
‘சீக்கிரம்.. ஒரு கார் வாங்க வேண்டும்.அதற்கு முன்னர் கார் ஓட்டப் பழக வேண்டும்.’

அவனுக்கு வழிவிட்டேன்,
அப்படியும் திட்டிவிட்டான்.

“முடியாதுடா” என்று சொல்லிவிட்டேன்.
‘இவன் என்ன சொல்றது? நம்ம என்ன சாவுறது?’.

அண்ணா சாலையில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம்.
நேரம் 9:45. “சரி நேரமாயிடுச்சு.. கிளம்பலாம்” என்றார் ஒரு நண்பர்.

புறப்பட்டோம்.
அங்கு போய் சேரும்போது சரியாக மணி 10.
சத்யம் காம்ப்ளெக்ஸ்.
பிரிவியூவுக்காக டிக்கெட் ஏற்பாடு செய்திருந்தார் நண்பர்.

‘குசேலன்’ படம் பார்ப்பதற்காக.

Saturday, July 26, 2008

மட்டைப்பந்தும் நெட்டை ஆனந்தும்


இது மூன்றாவது வாரம். அலுவலக நண்பர்களுடன் மெரினா பீச்சில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து. எனக்கு இரண்டாம் முறை. சென்ற வாரம் நான் செல்லவில்லை.

திருவில்லிக்கேணி இரயில் நிலையம் எதிராக கடற்கரை மணலில் ஒரு இடம் பிடித்து விட்டோம். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் போல இனி நாங்கள் கடற்கரை கொண்டான்(கள்).
சீரணி அரங்கம் முன்பு இருந்த இடம் போல. அரங்கத்திற்கு செல்ல பயன்பட்ட சிறிய சாலை ஒன்று இன்னும் இருக்கிறது. பாவம், இடிக்க முடியவில்லை போலும்.

அதில்தான் வரிசையாக ஐந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் தங்களுக்குள் அணிகளாக பிரிந்து கொண்டு விளையாடுகிறார்கள். மதியம் மூன்றரை மணிவாக்கில் சென்றால் இடம் பிடித்து விடலாம். இன்று பா.ராகவனும், நலம் ஆசிரியர் பார்த்தசாரதியும் நாங்கள் வந்து சேர்வதற்கு கால் மணி நேரம் முன்னரே போய் துண்டு போடாமல் இடம் பிடித்து விட்டார்கள்.

பா.ராகவன் இன்று சற்று கொலை வெறியுடன் இருந்தார். டாஸை யார் வென்றாலும் தனக்குத் தான் முதலில் பேட்டிங், அதற்குப் பிறகு தனக்குத் தான் முதலில் பௌலிங் என்று ஜனநாயக முறைப்படி அறிவித்து வேறு விட்டார்.

நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள். 12 பேர் சேர்ந்தால் அறிவிக்கப்படாத Quorum. டீம் பிரிக்க ஆரம்பித்தோம்.

டாஸை எனது டீம் வென்றது.
நாங்கள் பேட்டிங்.
அதனால் பா.ரா எங்கள் டீம்.

அவரும், பார்த்தசாரதியும் இறங்கினார்கள். டிராவிடும், ஜாஃபரும் ஆடுவது போல நின்று நிதானமாக ஆடினார்கள். ரன் எடுக்கும்போது பா.ரா கீழே வேறு விழுந்து விட்டார். அதனால் பை-ரன்னர் வேறு. கிழக்கின் சப்-எடிட்டர் முகில் தான் இங்கும் அவரின் கை. முகில் கொஞ்சம் குசும்பு பிடித்த ஆள் வேறு.

அது என்னமோ தெரியவில்லை. இது மாதிரி கிரிக்கெட் விளையாடும் தருணங்களில், ஆடிக் கொண்டிருக்கும் எனது அணியின் விளையாட்டு வீரர் எப்போது அவுட் ஆவாரோ? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.

நிற்க..

Player - விளையாட்டு வீரர்
இதுக்கும் வீரத்துக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை.. playerக்கு தமிழில் நல்ல வார்த்தையே இல்லையா?

சரி.. உட்காருக.. :-)

நினைத்த மாதிரியே முகில் பா.ராவுக்காக ஓடி அவரை ரன் அவுட் ஆக்கிவிட்டான்.
அப்பாடா!
சத்தியமாக நானும் முகிலும் எந்த திட்டமும் போடவில்லை.ஆனால் என்ன செய்வது? முகிலும் நம்மளை மாதிரிதான் போல.

அப்புறம் என்னை முதற்கொண்டு எல்லோரும் விளையாடி பத்து ஓவர்களில் 52 ரன்கள் குவித்தோம்!

எதிரணியில் கஜபுல காத்தவராயன்கள் அதிகம்.

எதிர்பார்த்தது போலவே பா.ரா முதல் ஓவர்.
பெரிய சேதாரம் ஏதும் இல்லை.

இப்போது தான் பத்ரியும் வந்திருந்தார். “ஏன் லேட்?” என்றெல்லாம் நான் கேட்கவில்லை. இந்த கேள்வியை அலுவலகத்தில் அவர் என்னிடம் கேட்பதில்லை. We are Gentlemen. :-)

கொஞ்சம் பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

இரண்டாவது ஆட்டத்தில் இருந்து பத்ரியையும், தாமதமாக வந்த மற்ற அலுவலக நண்பர்களையும் மட்டும் ஏற்கனவே பிரிக்கப்பட்ட இரண்டு அணிகளுக்கும் இடையே TopUp செய்வது போல பிரித்துக் கொண்டோம்.
பத்ரி எதிர் அணியில்.

மீண்டும் டாஸ் வென்றோம்.
இருந்தாலும் ஜனநாயகம் படுத்தியது. அவரை அவுட் வேறு ஆக்க மாட்டேன் என்கிறார்கள். Cheif Editor என்பதாலோ என்னவோ? :-)
ஐந்து ஓவர் நின்று விளையாடி, கருணையின் அடிப்படையில் ரிட்டையர் ஆகி விட்டார்.

அப்புறம் நாங்களும் ஒவ்வொருவராக ஆடி ரிட்டையர் ஆகாமல் அவுட் ஆனோம்.
12 ஓவர்கள். ஸ்கோர்? நாற்பத்தி சொச்சம்.
வந்தார்கள். வென்றார்கள்.

மூன்றாவது மேட்ச்.

ஆரம்பிக்கும் முன்னரே பத்ரி வேறு.. twitter மூலம் ஊர் முழுக்க நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து கொண்டிருப்பதை தெரிவித்துக் கொண்டிருந்தார்.

டாஸ் வென்றோம்.
பா.ரா டயர்ட். இறங்கவில்லை.
மற்றவர்கள் தான் இறங்கினார்கள்.
இருட்ட ஆரம்பித்ததால் இம்முறை 8 ஓவர்கள் மட்டுமே.
நான் டக்.
மொத்தம் 36 ரன்கள்.
இருந்தாலும் இம்முறையாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற வெறி.

முதல் ஓவர் முத்துக்குமார்.கிழக்கின் துணை ஆசிரியர். அவனிடம் போய் நான் கலந்தாய்வு வேறு செய்தேன்.. கேப்டன் என்ற முறையில்.மேலும் மற்ற இரண்டு ஆட்டங்களில் ஓரளவு நன்றாகவே பந்து வீசியிருந்தேன். அந்த மிதப்பிலும்.

முத்துக்குமார் மெய்டன் ஓவர்.

இரண்டாவது ஓவர் பார்த்தசாரதி.அதிலும் ரன்கள் இல்லை.ஒரு விக்கெட் வேறு.

ஸ்கோர்: 0/1

மூன்றாவது ஓவர். எனது கையில் பந்து தரப்பட்டது. அதாவது நானே எடுத்துக் கொண்டேன்.

எதிரில் அவன் மட்டையுடன் நின்றுக் கொண்டிருந்தான்.

அவன் பெயர் ஆனந்த். எங்கள் அலுவலகத்தில் DTP Section'ல் பணிபுரிகிறான்.சற்று நெட்டையாக இருப்பான்.

முதல் பந்து.. அம்பயராக அருகில் வரம் ஆசிரியர் சிவக்குமார். அவருக்கு அருகே வெற்றி தேவதை நிற்பது போலவும், அவள் எனக்கு வெற்றியை வரமாகத் தர அவகாசம் பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருந்தது. பந்தை இறுக்கிப் பிடித்தேன். சற்று வெறியுடன் எறிந்தேன்.

சிக்ஸர்.

இருந்தாலும் இம்முறை பத்ரி twitter'ல் செய்தி பரப்பவில்லை.

Friday, July 18, 2008

டிஜிட்டல் பிளவு



இன்று காலையில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கான தமிழ்க்கணினி பயிற்சி பட்டறை மாநகராட்சி சமூக அரங்கில் நடைபெற்றது. இதை கணித்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கணினியில் எவ்வாறு தமிழ் படிக்கலாம், எழுதலாம் போன்ற அடிப்படை விஷயங்களைப் பற்றி செயல்முறை விளக்கங்களோடு பகிர்ந்துகொள்ள என்னை அழைத்திருந்தார்கள்.

ஆடியன்ஸ் பெரும்பாலும் மாநகராட்சி ஆசிரியைகள். ஆண்கள் மிகவும் குறைவு.

இதற்குமுன் வேறு சில கல்லூரி பட்டறைகளில் நான் இது தொடர்பாக பேசியிருந்தாலும், இந்த முறை நான் அதிக ஈடுபாட்டுடன் பேச ஆரம்பித்தேன். பெரும்பாலும் அரசுப் பள்ளிகளிலேயே நான் படித்திருந்ததால் என்னை அறியாமலேயே ஒரு emotional attachment இருந்தது.

முதலில் ரோமன் எழுத்து முறை கொண்ட (ஆங்கிலம் போன்ற) மொழிகளுக்கும், மற்ற (தமிழ் போன்ற) மொழிகளுக்கும் கணினியின் பார்வையில் உள்ள வித்தியாசங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டேன். பின்னர் கணினியில் ஆங்கிலம் எவ்வாறு ஒழுங்காகத் தெரிகிறது? ஏன் ஆங்கிலத்தில் உள்ளிடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை? போன்ற விஷயங்களுக்கு வந்தோம். சிறிது font, encoding, 8-bit, 16-bit, ansi, unicode, keyboard driver போன்ற விஷயங்கள் மேயப்பட்டன.

தமிழ் போன்ற மொழிகளுக்கு எழுத்துகளை உள்ளிட தனியாக ஒரு மென்பொருள் ஏன் தேவை என்பது அவர்களுக்குத் தானாகவே புரிந்துவிட்டது. அது மட்டுமில்லாமல், Windows xp நிறுவப்பட்ட கணினிகளில் தமிழ் தெரிவதற்கு சில பகீரதப் பிரயத்தனங்களை செய்ய வேண்டியுள்ளது, CD எல்லாம் கேட்கிறது! போன்ற சிரமங்களை சிலர் ஏற்கெனவே அனுபவங்களின் மூலம் அறிந்திருந்தனர்.

ஆதலால் முதல் 40 நிமிடங்களில், என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விட்டது.

இப்போது தீர்வுகளைப் பற்றி பேச ஆரம்பித்தேன்.

இதுநாள்வரை இந்த பிரச்சனைகளுக்கு என்னென்னெ மென்பொருள்கள் வந்தன? ஒவ்வொன்றும் என்னென்ன தீர்வுகள் தந்தன? எதையெல்லாம் தரவில்லை? என்று சொல்லிவிட்டு இதற்கு மேல் தியரி பேசினால் ஒன்று விரட்டியடித்து விடுவார்கள், முடியவில்லை என்றால் ஓடிப்போய்விடுவார்கள் என்பதால் செயல்முறை விளக்கத்திற்கு தாவலாம் என அறிவித்தேன்.

முதலில் NHM Writer.

வந்தவர்கள் அனைவருக்கும் NHM மென்பொருள்கள் கொண்ட CD மற்றும் வேறு சில CDகளையும் இலவசமாக கொடுப்பதற்கு கணித்தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட CD ஒன்றையே எடுத்து எனது மடிக்கணினியில் நுழைத்தேன்.

Setup file எங்குள்ளது என்பதில் இருந்து ஆரம்பித்து, installation எவ்வாறு செய்வது, regional language options நிறுவப்படாமல் இருந்தால் NHM Writer அதைத் தானாகவே சரி செய்து ஒரு தடவை restart செய்ய சொல்வது போன்ற சம்பிரதாயங்கள் அவர்கள் முன்னேயே திரையில் நடந்தேறின.

இம்முறை System tray, icon, mouse right button, click, keypreview, OnScreen Keyboard, Toggle key போன்ற விஷயங்கள் மேயப்பட்டன.

இப்போது தட்டச்சுவது எப்படி என்ற கட்டத்திற்கு வந்தோம்.

எனக்கு phonetic முறை பழக்கமென்பதால் toggle key-யாக Alt+2 அடித்து தட்டச்சிட ஆரம்பித்தேன். “அம்மா”.

“ஆமாம்.. தமிழ் வந்துடுச்சு”. “Alt key எங்கே இருக்கு”.

சிலர் என்னை நோக்கி முன்னேறினர்.

தாய்மொழியில் அம்மா எனத் தட்டச்சிட அன்னைகளுக்கு அத்தனை ஆர்வம்.

நான்கைந்து ஆசிரியைகள் முயற்சி செய்தனர்.

ஒருவருக்கு மட்டும் Altஐயும் 2ஐயும் ஒன்றாக சேர்த்து ஒரு முறை மட்டும் சேர்த்து அடிப்பது சிரமமாக இருந்தது.

பின்னர் அவரவர் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டனர்.

மீண்டும் கொஞ்சம் தியரி பேச ஆரம்பித்தேன்.

Alt+2ஐ விட Alt+1 நன்று என்றேன்.

தமிழ்99 முறையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதுதான் ஆரோக்கியமானது. NHM Writer'ன் keypreviewவும் OnScreen Keyboard'ம் உங்களுக்கு உதவும் என்றேன். அதுபோக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட CDயில் சிந்தாநதி எழுதிய “தமிழ்99 கையேடு” இருக்கிறது என்பதையும் தெரிவித்தேன்.

இத்துடன் முடித்து கொள்ளலாம் என எண்ணியபோது ஆண்டோ பீட்டர் NHM Converter பற்றியும் சிறிது பேசச் சொன்னார்.

இது இவர்களைக் குழப்புமே என்று தயங்கியவாரே NHM Converter பற்றியும் ஐந்து நிமிடங்கள் செய்முறை விளக்கம் நடந்தது.

எல்லாம் ஓரளவு இனிதே முடிந்தது என்று கூறி எனது Sessionஐ முடித்துக் கொண்டவாறு அறிவித்தேன்.

அப்போது பங்கேற்பாளர்கள் திசையில் இருந்து ஒரு குரல். அதை ஆமோதித்தவாரே மேலும் சிலர்.

“எங்க பள்ளிகளில் இருப்பதெல்லாம் மத்தவங்க பயன்படுத்தின Condemned கம்ப்யூட்டருங்க சார்..”

“xp எல்லாம் கிடையாது சார். Windows 98 தான்”

“ரொம்போ ஸ்லோவா இருக்கும்”

கடைசியாக... ஒரு ஆசிரியை கேட்டார்.

“சார்.. கம்ப்யூட்டரும் தருவீங்களா சார்.”