Monday, May 25, 2015

Breaking News! Broken Journalism!!


ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஏதாவது ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.
அது போலத்தான் மும்பை பயங்கரவாதத் தாக்குதலும்.

இந்தத் தாக்குதலின் மூலம் சம்பந்தப் பட்டவர்கள் என்ன கற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை.
ஆனால் எனக்கு ஒரு விஷயத்தை சிலர் தெளிவாகக் கற்றுக் கொடுத்தார்கள்.
நான் கடந்த சில வருடங்களாகவே ஒரு தவறை விடாமல் செய்துகொண்டு வந்திருக்கிறேன் என்று!

CNN-IBN, NDTV, Times Now...
இந்த தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகவா நான் தினமும் நாட்டு நடப்புகளை தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன்?
அடப்பாவிகளா!


CNN-IBN'ன் ராஜ்தீப் சர்தேசாயும், TIMES NOW'ன் அர்னாப் கோஸ்வாமியும் நிமிடத்திற்கு ஒரு முறை பீதியை கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.
இவர்களுக்குள் அப்படி ஒரு அவசர யுத்தம்.
யார் முதலில் பிணத்தைக் காட்டுவோம் என்று!.

அவ்வப்போது தம்பட்டம் வேறு அடித்துக் கொள்வார்கள்.
“இந்த கண்கொள்ளாக் காட்சியை உங்களுக்காக உங்கள் நியூஸ் சேனல்தான் முதன்முதலில் வழங்குகிறது..”, என்று.
இந்த அவசர புத்தியில் அவ்வப்போது எது புரளி, எது நிஜம் என்று கூட பிரித்து பார்க்கத் தெரியாத மூடத்தனம்.

இவர்களை மீண்டும் கொஞ்ச நாட்கள் செய்தித்தாள் ஊடகங்களுக்கு பணியாற்ற அனுப்ப வேண்டும். அப்போதுதான் ஒரு செய்தியை சிறிது நேரமாவது தனக்குள் அசை போட்டு, அதன் நம்பகத்தன்மையை ஆராய்ந்து, பின்னர் உலகுக்கு கொண்டு செல்லும் நிதானம் ஏற்படும்.

5 நிமிடத்திற்கு ஒரு முறை ஏதாவது BREAKING NEWS போட்டாக வேண்டும் என்று தீவிரமாக அலையும் இவர்களும் தீவிரவாதிகள் தான்.
ஏன்... அதே செய்தியை இன்னும் 10 நிமிடம் கழித்து NORMAL NEWS ஆகக் கொடுத்தால், அதற்குள் நேயருக்கு வயிற்றுப் போக்கா வந்துவிடப் போகிறது?

BIG BOSS'ல் ராகுல் மகாஜன் சுவரேறிக் குதித்தால் BREAKING NEWS.

இவர்கள் தங்களுக்குள்ளாகவே சிறிய வட்டமிட்டுக் கொண்டு வாழும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.
அப்படியென்றால், நீங்கள் அளிக்கும் செய்திகளை சில வருடங்களாகவே பார்த்து வரும் நான்?
நான் எதற்கும் ருத்ரனை ஒரு தடவை சந்திக்க வேண்டும்.

*****************************
NDTVயின் பர்கா தத் என்ன ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தார்.
தாஜ் ஹோட்டலில் சிதறிக் கிடந்த பீங்கான் துண்டுகளையும், கண்ணாடித் துகள்களையும் காட்டியவாறே அவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே!
அடங்கி விட்டேன்.

பாரத நாட்டின் ஒரு அழகான அடையாளச் சின்னம் சின்னாபின்னமாக்கப் பட்டு விட்டதாம்.
அது மட்டுமல்ல.. இந்த நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த நமது நாட்டின் குடிமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு விட்டார்களாம்.
அதனால் அவரும், அவரைச் சார்ந்த மற்ற தொலைக்காட்சி செய்தியாளர்களும் தேச பக்தியில் கதறி அழுது தீர்த்து விட்டனர்.

அப்படி என்றால் அதே நாளில் CST இரயில் நிலையத்தில் கொல்லப் பட்டார்களே? அவர்கள் யார்?
உங்களின் 65 மணி நேர ஒப்பாரி பயணத்தில், CST இரயில் நிலையத்தில் உங்கள் தேசபக்தி வண்டி 5 நிமிடம் கூட நிற்க வில்லையே!

கடந்த சில வருடங்களாகவே நாட்டில் ஆங்காங்கே இரயில்களிலும், பஜார்களிலும், ரோட்டோரக் கடைகளிலும் சாமான்யர்கள் இதுபோன்ற தீவிரவாதித் தாக்குதல்களினால் கொல்லப் பட்டார்களே? அப்போதெல்லாம் உங்களுக்கு இதுபோன்று உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடவில்லையா?

எத்தனை தள்ளு வண்டிகள், எத்தனை ப்ளாட்ஃபாரக் கடைகள் அடையாளம் தெரியாமல் அழிக்கப் பட்டிருக்கும்.

டாட்டாவிற்கு தாஜ் ஹோட்டல் இதே பொலிவுடன் இன்சூரன்ஸ் மூலம் கிடைத்துவிடும்.

சாமான்யனுக்கு?

சாமன்யனுக்கு தெருவில் நேர்ந்தால் நமது டி.வி சேனல்களுக்கு ஸ்டோரி.
ஸ்டோரி ஓட்டியவுடன் சுடச்சுட இரவு 10.30 மணிக்கு “Night Out” காட்ட வேண்டும்.

அய்யய்யோ...

“Night Out” போன்ற நிகழ்ச்சிகளை இவர்கள் இனி வரும் நாட்களில் நமக்கு எப்படிக் காட்டப் போகிறார்கள்?
நமது குடிமக்கள் ஒன்று கூடும் தாஜும், ஓபராய் ட்ரைடண்டும் தான் தாக்கப்பட்டு விட்டதே!