
கவிஞர் தாமரை ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் கருஞ்சாபம் ஒன்றை இட்டுள்ளார்.
சாபங்கள் பலிப்பதில்லை என எல்லோருக்கும் தெரியும். இருந்தும் இந்தப் பதிவிற்கு காரணம், அவர் தம் முட்டாள்தனத்தால் தமிழர்களிடையே உருவாக்கும் பிரிவினைதான்.
இந்தியர்களில் எத்தனையோ பேர் காஷ்மீர் பிரச்சனை, வடகிழக்கு இந்தியாவில் நிலவும் பிரச்சனை பற்றிக்கூடத் தெரியாமல், தங்களின் அன்றாடப் பிரச்சனையைக் கூட தாண்ட முடியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் எல்லோருக்கும் உங்களின் இந்த வரிகள் பொருந்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
“இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!”
“ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓட வைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப் போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக் குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!”
இது போன்று, இதை விடக் கொடுமையான வரிகள்.
கருணா ஈழத்தமிழன் தான். இந்தப்போரில் முக்கிய துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்பட்டவர். அதனால் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் நீங்கள் சபிப்பீர்களா? இல்ல.. இதுக்கு முன்னாடியே நீங்க சபிச்சு, அதனாலதான் இவ்வளவு கொடுமைகளும் நடந்ததா?
இப்படித்தான் தேர்தலுக்கு முன்னாடி ஒரு கூட்டத்தில் ஜெயலலிதாவை அமாவாசை என்றும், கலைஞரை அமாவாசைக்கு அடுத்த நாளென்றும் சொன்னீர்கள்.
கூடவே கலைஞர் பதவியை விட்டெறிந்தால் அவர் பின்னாடியே வந்திருப்போம் என்று டயலாக் பேசுனீர்கள்.
நீங்கள் நல்ல கவிஞர் மட்டுமல்ல.. வசனகர்த்தாவும் தான் என்று அன்றுதான் புரிந்தது.
ஏன்.. எத்தனை ஆண்டுகளாக வைகோ ஈழத்தமிழர்களுக்காக சுயநலமின்றி குரல் கொடுத்திருப்பார்! இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார். அவர் பின்னால் எத்தனைப் பேர் சென்றீர்கள்? அவருக்காக எத்தனைப் பேர் பக்க பலமாக நின்றீர்கள்?
சமுதாயத்தை சீரழிக்கிற மாதிரி சில சினிமாக்கள் எடுக்குறாங்களே! அதனால சினிமாவிற்கு பாட்டெழுதுவதையே விட்டு விடுவீர்களா? அதுக்கெல்லாம் கவிஞர் அறிவுமதிக்கு இருக்கிற மாதிரி தெளிவும், நேர்மையும் வேண்டும்.
தெளிவாக இருப்பவர்கள் உங்களைப் போன்று அரைவேக்காடுத்தனமாக உளற மாட்டார்கள்.
அது எப்படி! இவ்வளவு கொந்தளிப்பும் விஜய் அவார்ட்ஸ் வாங்கும்போது விடுமுறையில் சென்று விட்டதா?
அந்த மேடையில் உங்களுக்கு ஈழப்பிரச்சனை எல்லாம் மறந்துபோய் இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போகும் மகளிர் மசோதா பற்றித்தானே பேசினீர்கள்! அப்போ அவார்ட் வாங்குற சந்தோஷத்துல திடீர்னு இந்தியப் பிரஜை ஆகிட்டீங்களா?
நீங்கள் எப்படிப் பட்டவராகவும் இருந்து விட்டுப் போங்கள். உங்கள் தொழில் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்டது.
ஒட்டு மொத்த இந்தியாவையும் சபிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்..
நீங்கள் சபித்தவர்களில் எத்தனைப் பேர், உங்கள் சாபத்தின் காரணத்திற்கு துணை போனவர்கள்?
Thamarai's words are nothing but utter nonsense.