
இது மூன்றாவது வாரம். அலுவலக நண்பர்களுடன் மெரினா பீச்சில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து. எனக்கு இரண்டாம் முறை. சென்ற வாரம் நான் செல்லவில்லை.
திருவில்லிக்கேணி இரயில் நிலையம் எதிராக கடற்கரை மணலில் ஒரு இடம் பிடித்து விட்டோம். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் போல இனி நாங்கள் கடற்கரை கொண்டான்(கள்).
சீரணி அரங்கம் முன்பு இருந்த இடம் போல. அரங்கத்திற்கு செல்ல பயன்பட்ட சிறிய சாலை ஒன்று இன்னும் இருக்கிறது. பாவம், இடிக்க முடியவில்லை போலும்.
அதில்தான் வரிசையாக ஐந்திற்கும் மேற்பட்ட குழுக்கள் தங்களுக்குள் அணிகளாக பிரிந்து கொண்டு விளையாடுகிறார்கள். மதியம் மூன்றரை மணிவாக்கில் சென்றால் இடம் பிடித்து விடலாம். இன்று பா.ராகவனும், நலம் ஆசிரியர் பார்த்தசாரதியும் நாங்கள் வந்து சேர்வதற்கு கால் மணி நேரம் முன்னரே போய் துண்டு போடாமல் இடம் பிடித்து விட்டார்கள்.
பா.ராகவன் இன்று சற்று கொலை வெறியுடன் இருந்தார். டாஸை யார் வென்றாலும் தனக்குத் தான் முதலில் பேட்டிங், அதற்குப் பிறகு தனக்குத் தான் முதலில் பௌலிங் என்று ஜனநாயக முறைப்படி அறிவித்து வேறு விட்டார்.
நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள். 12 பேர் சேர்ந்தால் அறிவிக்கப்படாத Quorum. டீம் பிரிக்க ஆரம்பித்தோம்.
டாஸை எனது டீம் வென்றது.
நாங்கள் பேட்டிங்.
அதனால் பா.ரா எங்கள் டீம்.
அவரும், பார்த்தசாரதியும் இறங்கினார்கள். டிராவிடும், ஜாஃபரும் ஆடுவது போல நின்று நிதானமாக ஆடினார்கள். ரன் எடுக்கும்போது பா.ரா கீழே வேறு விழுந்து விட்டார். அதனால் பை-ரன்னர் வேறு. கிழக்கின் சப்-எடிட்டர் முகில் தான் இங்கும் அவரின் கை. முகில் கொஞ்சம் குசும்பு பிடித்த ஆள் வேறு.
அது என்னமோ தெரியவில்லை. இது மாதிரி கிரிக்கெட் விளையாடும் தருணங்களில், ஆடிக் கொண்டிருக்கும் எனது அணியின் விளையாட்டு வீரர் எப்போது அவுட் ஆவாரோ? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.
நிற்க..
Player - விளையாட்டு வீரர்
இதுக்கும் வீரத்துக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை.. playerக்கு தமிழில் நல்ல வார்த்தையே இல்லையா?
சரி.. உட்காருக.. :-)
நினைத்த மாதிரியே முகில் பா.ராவுக்காக ஓடி அவரை ரன் அவுட் ஆக்கிவிட்டான்.
அப்பாடா!
சத்தியமாக நானும் முகிலும் எந்த திட்டமும் போடவில்லை.ஆனால் என்ன செய்வது? முகிலும் நம்மளை மாதிரிதான் போல.
அப்புறம் என்னை முதற்கொண்டு எல்லோரும் விளையாடி பத்து ஓவர்களில் 52 ரன்கள் குவித்தோம்!
எதிரணியில் கஜபுல காத்தவராயன்கள் அதிகம்.
எதிர்பார்த்தது போலவே பா.ரா முதல் ஓவர்.
பெரிய சேதாரம் ஏதும் இல்லை.
இப்போது தான் பத்ரியும் வந்திருந்தார். “ஏன் லேட்?” என்றெல்லாம் நான் கேட்கவில்லை. இந்த கேள்வியை அலுவலகத்தில் அவர் என்னிடம் கேட்பதில்லை. We are Gentlemen. :-)
கொஞ்சம் பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
இரண்டாவது ஆட்டத்தில் இருந்து பத்ரியையும், தாமதமாக வந்த மற்ற அலுவலக நண்பர்களையும் மட்டும் ஏற்கனவே பிரிக்கப்பட்ட இரண்டு அணிகளுக்கும் இடையே TopUp செய்வது போல பிரித்துக் கொண்டோம்.
பத்ரி எதிர் அணியில்.
மீண்டும் டாஸ் வென்றோம்.
இருந்தாலும் ஜனநாயகம் படுத்தியது. அவரை அவுட் வேறு ஆக்க மாட்டேன் என்கிறார்கள். Cheif Editor என்பதாலோ என்னவோ? :-)
ஐந்து ஓவர் நின்று விளையாடி, கருணையின் அடிப்படையில் ரிட்டையர் ஆகி விட்டார்.
அப்புறம் நாங்களும் ஒவ்வொருவராக ஆடி ரிட்டையர் ஆகாமல் அவுட் ஆனோம்.
12 ஓவர்கள். ஸ்கோர்? நாற்பத்தி சொச்சம்.
வந்தார்கள். வென்றார்கள்.
மூன்றாவது மேட்ச்.
ஆரம்பிக்கும் முன்னரே பத்ரி வேறு.. twitter மூலம் ஊர் முழுக்க நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து கொண்டிருப்பதை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
டாஸ் வென்றோம்.
பா.ரா டயர்ட். இறங்கவில்லை.
மற்றவர்கள் தான் இறங்கினார்கள்.
இருட்ட ஆரம்பித்ததால் இம்முறை 8 ஓவர்கள் மட்டுமே.
நான் டக்.
மொத்தம் 36 ரன்கள்.
இருந்தாலும் இம்முறையாவது வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற வெறி.
முதல் ஓவர் முத்துக்குமார்.கிழக்கின் துணை ஆசிரியர். அவனிடம் போய் நான் கலந்தாய்வு வேறு செய்தேன்.. கேப்டன் என்ற முறையில்.மேலும் மற்ற இரண்டு ஆட்டங்களில் ஓரளவு நன்றாகவே பந்து வீசியிருந்தேன். அந்த மிதப்பிலும்.
முத்துக்குமார் மெய்டன் ஓவர்.
இரண்டாவது ஓவர் பார்த்தசாரதி.அதிலும் ரன்கள் இல்லை.ஒரு விக்கெட் வேறு.
ஸ்கோர்: 0/1
மூன்றாவது ஓவர். எனது கையில் பந்து தரப்பட்டது. அதாவது நானே எடுத்துக் கொண்டேன்.
எதிரில் அவன் மட்டையுடன் நின்றுக் கொண்டிருந்தான்.
அவன் பெயர் ஆனந்த். எங்கள் அலுவலகத்தில் DTP Section'ல் பணிபுரிகிறான்.சற்று நெட்டையாக இருப்பான்.
முதல் பந்து.. அம்பயராக அருகில் வரம் ஆசிரியர் சிவக்குமார். அவருக்கு அருகே வெற்றி தேவதை நிற்பது போலவும், அவள் எனக்கு வெற்றியை வரமாகத் தர அவகாசம் பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருந்தது. பந்தை இறுக்கிப் பிடித்தேன். சற்று வெறியுடன் எறிந்தேன்.
சிக்ஸர்.
இருந்தாலும் இம்முறை பத்ரி twitter'ல் செய்தி பரப்பவில்லை.